குழந்தையின்மை சிகிச்சைகளில் கடைசித் தீர்வாக
டெஸ்ட் டியூப் எனப்படுகிற சோதனைக் குழாய் முறை செய்யப்படுகிறது. ஆனால்,
அதுவுமே எல்லோருக்கும் வெற்றியைத் தருவதில்லை. கருமுட்டையை வளரச் செய்து,
கண்காணித்து, கடைசிக் கட்டமாக கருப்பையினுள் செலுத்தும் போது, சின்னதாக ஒரு சிக்கல் வந்தாலும், ஒட்டுமொத்த முயற்சியும் தோல்விதான்....
35, 40 வயதுக்கு மேல் பெரும்பாலும் பெண்களின் கர்ப்பப் பை வாய் கடினமாகி
விடுகிறது. கருவை உள்ளே செலுத்த முடியாத நிலை உண்டாகிறது. ரத்தப் போக்கு
ஏற்படுகிறது. முன்பெல்லாம் இந்தப் பிரச்னைக்கு, அதாவது இறுகிப் போன
கர்ப்பப் பை வாயைத் திறக்க, ‘மெட்டல் டைலேட்டர்’ உபயோகிப்பார்கள். மிகச்
சிறிய அளவு முதல் கொறடு அளவு வரை, வேறு வேறு அளவுகளில் இதற்கென பிரத்யேக
கருவிகள் வைத்திருப்பார்கள். அதை வைத்து, கர்ப்பப் பை வாயைத் திறக்கச்
செய்கிற அந்த சிகிச்சை, முழுப்பலன் தரவில்லை.
90 நொடிகளுக்குள்
கருவை, கர்ப்பப் பைக்குள் செலுத்தியாக வேண்டும் என்கிற நிலையில், மெட்டல்
டைலேட்டர் முறையில், திறந்து கொண்ட வாயானது, சட்டென மறுபடி மூடிக் கொண்டு
விடும். முந்தைய எல்லாக் கட்டங்களிலும் சிறப்பாக செய்துவிட்டு,
சிகிச்சையின் கடைசிக்கட்டமான இந்த இடத்தில் கோட்டை விட வேண்டியிருக்கும்.
கருவை உள்ளேயே செலுத்த முடியாமலோ, அப்படியே செலுத்தினாலும், பாதியிலேயே
நின்று கொள்ளும். ரத்தப் போக்கு அதிகமாகலாம்.
இப்படிப்பட்ட பிரச்னைகளுக்கு என்னதான் தீர்வு?
‘ஹிஸ்ட்ரோஸ்கோப்பிக் ஷேவிங் ஆஃப் செர்விகலோஸ்’ எனப்படுகிற முறையில், மேலே
சொன்ன அத்தனை சிரமங்களும் களையப்படுகின்றன. பொதுவாகவே ஒரு பெண்ணுக்கு
அடுத்த மாதம் சோதனைக் குழாய் முறையை முயற்சி செய்யப் போவதாக ஒரு மருத்துவர்
முடிவெடுத்தால், முதல் மாதமே ‘ட்ரையல் டிரான்ஸ்ஃபர்’ என ஒன்று செய்வார்.
குறிப்பாக கர்ப்பப் பை வாய் இறுகிப் போன பெண்களுக்கு மாத்திரைகள் கொடுத்து,
கர்ப்பப் பை வாயைத் திறக்கச் செய்து, ‘ஹிஸ்ட்ரோஸ்கோப்பி’ மூலம்
பிரச்னைக்குரிய இடங்களை ஆராய்வார்கள். தேவைப்பட்டால் கர்ப்பப் பை வாய்
சுவரை லேசாகச் சுரண்டி எடுத்துவிடுவார்கள்.
இம்முறையில் கர்ப்பப்
பை பாதையில் ஏதேனும் அடைப்பிருக்கிறதா, கருவைச் செலுத்தினால் பாதியில்
நின்று விடுமா, ரத்தப் போக்கு இருக்கிறதா என்பதையெல்லாம் பார்த்துப் பதிவு
செய்து கொள்வார்கள். அடுத்த மாதம் சோதனைக் குழாய் சிகிச்சையை
செயல்படுத்தும் போது, இந்தத் தகவல்கள் கை கொடுக்கும். தடங்கல் இன்றி,
சிகிச்சை வெற்றியடையும் வாய்ப்புகளையும் இது அதிகரிக்கும்....